மதுரை மத்திய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 315 பயனாளிகளுக்கு ரூபாய் 1.46 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Published Date: March 13, 2024

CATEGORY: CONSTITUENCY

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

மதுரை மத்திய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 315 பயனாளிகளுக்கு ரூபாய் 1.46 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான விழா மதுரை புட்டு தோப்பு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், சமூக நலன் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுடன் திருமாங்கல்யத்துக்கு தங்கம் உள்பட 315 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூபாய் 1.46 கோடியில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

முன்னதாக சப்பானி கோவில் தெரு, ராமலிங்க பிள்ளை தெரு, வேளாளர் தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் பதித்த சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சிம்மக்கல் ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, எஸ்.எஸ் காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் கம்பர் மேல்நிலைப்பள்ளி, வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

இதை அடுத்து ஆரப்பாளையம், உதகை புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் மா.செள. சங்கீதா, மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் ர.த.ஷாலினி, மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Media: Dinamani